Friday, August 30, 2013

இருளின் வெளிச்சத்தில்




 கண்முன் தெரியும் இருளை கடந்தே ஆக வேண்டும். இருளைச் சுற்றிலும் வெளிச்சம் அழகாக வீசிக் கொண்டிருந்தது. அடர்காட்டுக்குள் வெளிச்சம் ஊடுருவ இயலாதது போல அங்கே மட்டும் இருள் அப்பிக்கிடந்தது.

இருளின் கருமை சொல்லவொண்ணா கோபத்தை மனதில் ஏற்றிக்கிக்கொண்டிருந்தது. இதை கடக்க வேண்டும் என்ற நிலைவந்த போது “ஏன்,எனக்கு மட்டும்,என்ன பாவம் செய்தேன்” என்ற கேள்வி அனுவின் மனதில் பேரலையாக ஒலித்துக் ...கொண்டிருந்தது. கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன.ஆறுதல் என்ற அணையில்லாததால் கண்ணீர் மடை திறந்த வெள்ளம் போல் கொட்டிக் கொண்டிருந்தது.

“அழுது துக்கத்தை கரைத்து விடுங்கள் அனு, சீக்கரமாக செயல்பட்டால் தான் நல்லது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பாதிப்பு கூடிக்கொண்டே போகும்.” ஒலித்த குரல் மீது மேலும் கோபம் வந்தது.

அழுவதற்கு கூட நேரம்கொடுக்காத விதியின் மீது வெறுப்பு தொற்றிக் கொண்டது. அதிர்ச்சி, துக்கம் இரண்டும் கலந்து அனுவை துவளச் செய்தன. விழப்போனவளை இரமேஷின் கரங்கள் ஆதரவாக அணைத்துக் கொண்டன. அவனுக்கே ஆறுதல் என்ற நிலையிலும் இவளது நிலைகண்டு இவளுக்கு சுமைதாங்கியாக மாறினான்.

“எல்லா, சரி ஆகிடும் அனும்மா”

 “எப்படிடா”

 “தெரியல,நம்பிக்கை இருக்கு “ என்று இல்லாத நம்பிக்கைக்கு உயிர் கொடுக்க முனைந்தான்.

எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்று இரமேசுக்கு தெரியவில்லை. ஒரு இயந்திரம் போல் உணர்ந்தான். புத்தி முழுவதுமாக ஸ்தம்பித்து போய் இருந்தது. ”முதலில் தான் தேறவேண்டும்” என்று மனதிற்குள் உரு ஏற்றிக்கொண்டான். முழுவதுமாக உடைந்து போன அனுவை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. நம்பிக்கை பொய்ப்பதை விட கனவுகள் பொய்த்துப் போவது மிகவும் வேதனையைத் தந்தது.
 
“எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் எதிர்கொண்டே ஆகவேண்டும், சோர்ந்து போய்விடக் கூடாது “ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான். அங்கு மெளனம் மட்டுமே நிரம்பி வழிந்தது. வார்த்தைகள் கேட்பாரற்ற குழந்தை போல் மூலையில் கிடந்தன.

இதை ஏதும் உணராத அவர்களது 2 வயது குழந்தை ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்க்க பார்க்க துக்கம் அதிகரித்தது இருவருக்கும்,ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து தேற்றிக் கொள்ள அரும்பாடு பட்டனர்.

அனுவிற்கு அழுவதைத் தவிர ஏதும் செய்ய இயலவில்லை. நேரம் ஆக ஆக கீதுவிற்கு மதிய உணவு கொடுக்க வேண்டுமென புத்திக்கு உரைத்தது. ஏதோ ஒரு வெறுமை வீட்டையும், மனதையும் ஆக்கரமித்து இருந்தது.

“தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இழப்பு தான்” என்ற குரல் இரமேஷ்,அனுவின் மனங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“நாளைக்கு காலைல வரோமுனு சொல்லிடு”

 “முடியுமா அனு உன்னால,ரொம்ப உடைஞ்சு போய் இருக்க”

 “சமாளிச்சுடுவேண்டா, தாமதிக்க வேண்டாம்” சொல்லும் போதே கண்ணீர் எட்டிப் பார்த்தது.

மெதுவாக அணைத்து “எல்லாம் சரியாகிடும் அனு”

 “ஆகனும்பா,ஆக்கனும் “ என்றாள்

”நீ கீதுகுட்டி கூட விளையாடு, நான் சமைக்கிறேன்” சமையலறைக்குள் நுழைந்தாள்.
 
கீதுவுடன் பேசி சிரித்து ரமேஷ் விளையாட ஆரம்பித்தான். ஏனோ அந்த சிரிப்பிலும் சோகம் அப்பிக் கிடந்ததை உணர முடிந்தது. தீராத சோகத்தை அளித்துவிட்டு அந்த நாள் விடைப்பெற்றுக் கொண்டது.

அடுத்த நாள் காலையில் மருத்துவமனையை அடைந்த போது நேற்று டாக்டர் “ உங்கள் குழந்தை கீதா Normal குழந்தை இல்லை” என்று முத்திரை குத்தி நீட்டிய ரிப்போர்ட்ஸ் நியாபகம் வந்தது.
 
 “முதல்ல இரண்டு பேரும் தைரியமா இருங்க,உங்க குழந்தை "special kid", இந்த வார்த்தைகள் அனுவின் காதில் விழுந்ததும் புத்தி கல்லாக மாறிவிட்டிருந்தது. பிறகு மருத்துவர் சொன்ன ஏதும் காதில் விழவில்லை.

இவர்களின் அதிர்ச்சி அவருக்கு பழகிப் போன ஒன்றாகக் கூட இருந்திருக்கலாம். மெதுவாக ரமேஷ் தோள்களைத் தட்டி “சில உண்மைகளை நாம் ஏத்துக்க பழகிக்கனும், சீக்கிரம் தெரபி ஆரம்ப்பிக்கனும்,தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்பு அதிகமாகும்” என்றார்.

இன்று அவர் முன் அமர்ந்த போது எதிர்கொள்ளும் தைரியம் இருவருக்குமே இருந்தது. அவர் பொறுமையாக குழந்தையின் குறைபாடுகளை விளக்கினார்.

“சரி பண்ணிடலாமா?”: என்ற கேள்வி அனிச்சையாக வந்து விழுந்தது.

“2 வயது இப்ப, தெரபி ஏத்துக்கரத பொறுத்து தான் சொல்ல முடியும்”

கீது பிறந்த போது அனுவும் ,ரமேஷும் அவளுக்காக தீட்டிய வருங்கால திட்டங்கள் அனைத்தும் கருணையே இல்லாமல் கொல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டதை உணர முடிந்தது.

“எப்ப தெரியும்”

 “சரி பண்ண முடியாவிட்டாலும், கட்டுக்குள் வைக்க முடியும், ஒவ்வொரு குழந்தையைப் பொறுத்து மாறுபடும், சில வருடங்கள் கழித்து சொல்லிடலாம், நார்மல் வாழ்க்கை வாழமுடியுமா இல்லையானு”

அந்த பெரும் இருட்டை கடக்க ஆயுத்தமானதும், கடந்தவர்களைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டது. அதற்கான பயணங்கள் ஆரம்பித்தன. இருட்டைப் பார்த்தும் பயத்தில் கண்கள் கலங்கின. பழக்கப்பட்ட முனைந்த போது தன்னைப் போலவே நிறையப் பேர் அங்கு இருப்பதை காண முடிந்தது, உள்ளே நுழையத் தயங்கிய போது உதவிக்கரம் நீட்டப்பட்டது.

இது புது உலகம்.இங்கு அன்பு மட்டுமே இறைந்து கிடந்தது.சோர்ந்த போதெல்லாம் யாரோ ஒருவர் நம்பிக்கையைத் தெளித்து சென்றார்கள். எல்லோருக்கும் பொதுவான இலட்சியமாக இருட்டைக் கடப்பது ஒன்று தான் இருந்தது. வெளிச்சத்தை நோக்கிய பயணம் நீண்டு கொண்டே போனது. அனுவும்,ரமேஷும் தன் பின்னால் வருபவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டிய வண்ணம் பயணம் தொடர்ந்தனர்.

எல்லோராலும் இருட்டை கடக்க முடிவதில்லை. சில குழந்தைகள் ஆரம்ப கட்டத்திலேயே பயணத்தை முடித்துக் கொண்டனர். சில குழந்தைகள் பாதியில். உண்மையை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொண்ட பெற்றோர்கள குழுக்களாக குழந்தைகளின் எதிர்காலத் திட்டத்தை தீட்டி செயல்படுத்த ஆரம்பித்தனர். பயணம் மேற்கொள்வோருக்கு நம்பிக்கை பாதையைக் காட்டினர்.

பயணத்தில் ஒரு இடத்தில் தாயும் குழந்தையும் மட்டுமே திணறிக் கொண்டிருந்தனர். இந்தக் குழந்தை வேண்டாமென்று தந்தை உதறிவிட்டு போன கதை சொல்லப்பட்டது.

கீதா ரமேஷின் கரங்களை அழுந்தப் பற்றினாள். அவன் இவள் விழிகளை கேள்விக் குறியோடு நோக்கினான்.

“தேங்க்ஸ்டா”

 “எதுக்குடி”

 “விட்டுட்டு போகாம அனுசரனையா இருக்கரதுக்கு”

 “கண்ணம்மா, என்ன பேச்சு இது, கீதுக்குட்டி என் உயிருடி, ” என்று அவளைக் குழந்தையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்

இன்னொரு இடத்தில் தந்தையும், மகனும் மட்டுமே போராடிக் கொண்டிருந்தார்கள். அனுவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான். ரமேஷின் வார்த்தைகள் சொல்லாத விசயங்களை மெளனம் அழகாக விளக்கியது. இந்தப் பயணத்தில் இருவரின் அன்பும் அடர்த்தியானதை இருவராலும் உணரமுடிந்தது. மெதுவாக வெளிச்சத்தின் தடயங்கள் தட்டுப்பட்டன. மகிழ்ச்சியின் எல்லையில் அடி எடுத்து வைத்தனர் இருவரும்.

அங்கே நிறைய பேர் அவர்களை வரவேற்க காத்திருந்தனர். பயணத்தின் அனுபவங்கள் பகிரப்பட்டன. இவர்களும் வரவேற்கும் குழுவில் இணைந்து விட்டனர். இவர்களின் கதையும் இருளின் பயணத்தை துவங்குபவர்களுக்கு நம்பிக்கைத் துளியாக மாறக்கூடும்.

இந்த நொடியோ, மறுநொடியோ, சில நொடிகள் கழித்தோ, சில மணித்துளிகள் கழித்தோ, சில வருடங்கள் கழித்தோ இருளைக் கடந்து வரும் இன்னொரு குடும்பத்திற்காக எல்லோரும் இருகரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறார்கள்.

2 comments:

  1. கதை நெடுக உணர்ச்சித் ததும்பல்கள்.
    "வார்த்தைகள் சொல்லாத விசயங்களை மெளனம் அழகாக விளக்கியது"
    எனக்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
    நன்றி தோழி

    ReplyDelete